உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர வாகன விபத்து ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்திலும் பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அதிஉயர் மின்னழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த வேகத்தில் மோதியுள்ளது.

மேலும் மோதிய அடுத்த சில விநாடிகளில் மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து ஏற்பட்ட மின்சாரப் பொறிகள் காரின் மீது பாய்ந்து, கார் முழுவதும் அசுர வேகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த எதிர்பாராத கொடூர விபத்தில், காரின் உள்பகுதியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

கார் தீப்பிழம்பாக மாறிய சூழலில், கதவுகள் பூட்டிக்கொண்டதாலும், மின்சாரப் பாய்வு அதிகமாக இருந்ததாலும் உள்ளே இருந்த இளைஞர்கள் அலறித் துடித்தபடியே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த விபத்தைக் கண்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காரில் பற்றி எரிந்த தீயின் வீரியம் காரணமாகப் அருகில் செல்ல முடியாமல் திகைத்து நின்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் காரில் இருந்த 3 வாலிபர்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலிஸார், அவர்களைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே காரில் சென்ற மூன்று இளம் உயிர்கள் நள்ளிரவில் கொடூரமாகப் பலியான இந்தச் சம்பவம் லக்கிம்பூர் கேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.