ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி, பின்னர் அவரைச் செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

​கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. 11-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, ரஞ்சித் என்ற இளைஞரைக் காதலித்து வந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ரஞ்சித்தின் வீட்டிற்குச் சென்ற மாணவி, தான் கர்ப்பமாக இருப்பதால் உடனடியாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், வீட்டிலிருந்த செல்போன் சார்ஜர் ஒயரால் மாணவியின் கழுத்தை நெரித்துத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார்.

​கொலை செய்த பின்னர், கொடூர குற்றவாளி ரஞ்சித் மாணவியின் உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துத் தப்பியோடினார். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் ரஞ்சித்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.