உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தெருநாய்களுக்கு உணவு வழங்கச் சென்ற பெண்ணுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொசைட்டியின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் தெருநாய்களுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்க அந்தப் பெண் சென்றுள்ளார். இதைப் பார்த்த குடியிருப்புவாசிகள், பார்க்கிங் பகுதியில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நாய்களுக்கு பார்க்கிங் பகுதியில் உணவு வழங்குவதால் அவை அங்கேயே தங்கிவிடுவதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படுவதாகவும் சிலர் தெரிவித்தனர். மேலும், நாய்கள் ஏற்கெனவே சிலரைத் தாக்கியுள்ளதாகவும், இரவு நேரங்களில் பொதுமக்களைத் துரத்துவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் கொண்டு வந்த உணவை ஒருவர் கீழே கொட்டியதாகவும் காணொலியில் தெரிகிறது. இதையடுத்து அங்கு மேலும் சிலர் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த அந்தப் பெண், கடந்த 10 முதல் 15 நாள்களாக நாய்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்றும், உணவு வழங்கப்படும் இடத்துக்கு அவை வர முடியாததால் பார்க்கிங் பகுதிக்கு வந்து உணவு வழங்கியதாகவும் கூறினார். தாம் விலங்குகள் நல அமைப்பில் தன்னார்வலராக இருப்பதாகத் தெரிவித்த அவர், நாய்கள் வளர்ந்த பகுதியில் அவற்றுக்கு உணவு வழங்குவதைத் தடுக்க முடியாது என்றும் வாதிட்டார். நாய்களுக்கு வயிறு நிறைய உணவு கிடைத்தால் அவை அமைதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்பதே தங்களது கவலை என குடியிருப்புவாசிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்குவாதத்தின்போது, “நாய்கள் பசியாக இருக்கின்றன என்றால், என் குழந்தைகளை நாய் கடிக்க விடுவதா?” என ஒருவர் கேள்வி எழுப்பியதாகக் காணொலியில் பதிவாகியுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது சொசைட்டி பாதுகாவலர்களும் அங்கு இருந்தனர். இந்தச் சம்பவம் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு நடைபெற்றதாக குடியிருப்பாளர் சாகேத் ஜெயின் தெரிவித்துள்ளார். தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கான உரிமை ஒருபுறமும், குடியிருப்புவாசிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மறுபுறமும் என இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. இருப்பினும், இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தத் தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.