கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி – குண்டுபேட்டை நெடுஞ்சாலையில், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குடும்பத்தை நோக்கி ஆக்ரோஷமாக யானை ஒன்று பாய்ந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதி சாலையில் யானை அருகில் வந்து நின்ற அந்த பயங்கரமான தருணங்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கேரள மாநிலம் ஒரு  திருச்சபையின் விகாரரான தந்தை ரெஜி பவுல் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் குண்டுபேட்டையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் மூன்று காட்டு யானைகள் திடீரென வனப்பகுதியிலிருந்து சாலைக்கு வந்தன.

யானைகள் சாலையைக் கடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அனைவரும் உடனடியாகத் தங்கள் வாகனங்களைச் சாலையோரம் நிறுத்திவிட்டு அவை கடந்து செல்லும் வரை காத்திருந்தனர். யானைகள் வனப்பகுதியை நோக்கிச் செல்வதுபோல் தோன்றியதும், ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்கத் தொடங்கினர். முதலில் ஒரு டிராவலர் வாகனம் சென்றது, அதனைத் தொடர்ந்து ஒரு எர்டிகா காரும், அதற்குப் பின்னால் தந்தை ரெஜி பவுலின் குடும்பத்தினர் சென்றுகொண்டிருந்தனர்.

 

ஆனால், சில விநாடிகளிலேயே நிலைமை மிகவும் ஆபத்தான கட்டத்திற்கு மாறியது. சாலையில் சென்றுகொண்டிருந்த யானைகளில் ஒன்று திடீரெனத் திரும்பி, பின்னால் நின்றுகொண்டிருந்த வாகனங்களை நோக்கி ஆக்ரோஷமாக நெருங்கி வந்தது. காருக்குப் பின்னால் மற்ற வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததாலும், பின்னோக்கிச் செல்ல இடமில்லாததாலும் என்ன செய்வதென்று அறியாமல் குடும்பத்தினர் திகைத்து நின்றனர்.

தந்தை ரெஜி பவுலும் அவரது குடும்பத்தினரும் யானைக்கு மிக அருகில் வெறும் சில அடி தூரத்தில் சிக்கிக்கொண்டனர். சாதாரணமான ஒரு வனவிலங்குப் பயணம், கண் இமைக்கும் நேரத்தில் மரண பயத்தைக் காட்டும் அபாயகரமான சூழலாக மாறியது. அதிர்ஷ்டவசமாக, யானை சற்று விலகிச் சென்றதால் அந்தக் குடும்பம் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாகத் தப்பியது.

இந்தச் சம்பவம் குறித்துப் பின்னர் பேசிய தந்தை ரெஜி பவுல், தங்களது குடும்பம் எப்படி அந்தப் பயங்கரமான சூழலில் இருந்து தப்பியது என்பதை விவரித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகக் கவலை தெரிவித்தனர். அதேசமயம், இது போன்ற வனப்பகுதி சாலைகளில் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், சிலரின் அலட்சியமான நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. காடுகளுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது காட்டு யானைகளின் நடமாட்டம் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது.