கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தில், மரங்கள் மற்றும் செடிகளுடன் கூடிய மிகப்பெரிய நிலப்பரப்பு ஒன்று தண்ணீரில் மிதந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 140 மீட்டர் நீளமும் 70 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மிதக்கும் நிலப்பரப்பு, இரண்டு கால்பந்து மைதானங்களுக்கு நெருக்கமான அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சியை படகில் சென்ற ஒருவர் முதலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொலி இருக்கலாம் என அதிகாரிகள் முதலில் சந்தேகித்தனர். ஆனால், ஜூலை 21-ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தபோது, அந்த மிதக்கும் நிலப்பரப்பு உண்மையானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னணி குறித்து பி.சி. ஹைட்ரோ அதிகாரிகள் ஒரு சாத்தியமான காரணத்தை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நீர்த்தேக்கத்தின் கரையோரத்தில் மரக்கட்டைகள் மற்றும் தாவரக் கழிவுகள் குவிந்திருக்கலாம். அவற்றின் மீது காலப்போக்கில் தாவரங்கள் வளர்ந்து, ஒரு திடமான மிதக்கும் அமைப்பு உருவாகியிருக்கலாம். கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததால், இந்தப் பகுதி கரையிலிருந்து பிரிந்து நீரில் மிதக்கத் தொடங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆச்சரியமாக, அந்த ‘மிதக்கும் தீவு’ ஒரு கட்டத்தில் செயற்கைக்கோள் படங்களிலிருந்து காணாமல் போனது. பின்னர் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், ஆஸ்பிகா ஆற்றுப் பகுதியை ஒட்டிய இடத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது நிலையான தீவு அல்ல என்பதால், அதன் அருகே செல்ல வேண்டாம் என்று படகோட்டிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இயற்கையாக உருவான இந்த அரிய மிதக்கும் நிலப்பரப்பு, தற்போது கனடாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
