மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த லிஃப்ட் விபத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி உயிரிழந்தார். மரத்தில் இருந்து தவறி விழுந்து தோள்பட்டையில் காயமடைந்த சுரேஷ் சென் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை இரவு அவரை படுக்கையில் வைத்து மருத்துவமனையின் மேல்தளத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது லிஃப்ட் திடீரென செயலிழந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் சிக்கி உயிரிழந்தார்.
ரீவா நகரின் உள்ள பகுதியில் தேசிய மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரத்தில் இருந்து விழுந்து காயமடைந்த சுரேஷ் சென், சிகிச்சைக்காக அங்கு அழைத்துவரப்பட்டார். அவரை படுக்கையுடன் லிஃப்டில் மருத்துவமனை ஊழியர் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினரை படிக்கட்டுகள் வழியாக வருமாறு கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மேல்தளத்துக்குச் சென்ற குடும்பத்தினர், லிஃப்டில் நோயாளி சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
லிஃப்ட் பழுதடைந்திருந்த நிலையிலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், சம்பவத்துக்கு முன்பாக மற்றொரு நபரும் லிஃப்டில் சிக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு வெளியே குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிஃப்ட் எவ்வாறு செயலிழந்தது, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து போலீஸார் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான முழுமையான காரணமும், பொறுப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையும் தெரியவரும்.
