மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில், அடக்கம் செய்யப்பட்ட 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல் தகராறு காரணமாகக் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, அவளது குடும்பத்தினரின் வீட்டின் முன்பு வீசப்பட்ட விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியரின் பித்தார்வார் பகுதியில் உள்ள முன்ஷி கா புரா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா பாய் மற்றும் பிர்பால் சிங் பன்ஜாரா தம்பதியினரின் 3 மாத பச்சிளம் பெண் குழந்தை, உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பீம்வாடா நதிக்கரையில் அமைந்துள்ள மயானப் பகுதிக்கு அருகில் குழந்தையை அவர்கள் அடக்கம் செய்தனர்.

ஆனால், நதிக்கரை ஓரத்தில் உள்ள அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் குர்ஜர் சமுதூாயத்தைச் சேர்ந்த சிலர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி குழந்தையை அடக்கம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில், அந்த நிலத்தில் இருந்த குழந்தையின் கல்லறையைச் சில மர்ம நபர்கள் பலவந்தமாகத் தோண்டி, உடலை வெளியே எடுத்து குழந்தையின் வீட்டின் முன்பு வீசிச் சென்றுள்ளனர்.

இறந்த குழந்தையின் உடலை அவமதித்து வீட்டின் முன்பு வீசிய இந்தச் செயலால் ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் உள்ளூர் பொதுமக்களும், குழந்தையின் உடலைச் சாலையில் வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டது.

தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், காவல்துறையினர் முன்னிலையில் அக்குழந்தையின் உடல் வேறு பாதுகாப்பான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ் குபேர் கூறுகையில், “இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. நிலத்தின் உரிமையை ஆய்வு செய்ய வட்டாட்சியர் அனுப்பி வைக்கப்படுவார். விசாரணையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், கிராமத்தில் இதுபோன்ற மோதல்களைத் தவிர்க்க நிரந்தர மயான நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.