தமிழக அரசியலில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், தற்போது எல்லையையும் தாண்டி ஒரு விசித்திரமான சர்ச்சை வெடித்துள்ளது. வட மாநில சமூக வலைதள இன்ப்ளூயன்ஸர்கள் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும் வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ஸ்க்ரோல் பாகிஸ்தான்’ என்ற முகநூல் பக்கத்தில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைப் பின்பற்றித்தான் விஜய் அரசியலுக்கு வந்ததாக ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

ஒரு தமிழக முதலமைச்சரின் புகழ் எப்படி திடீரென வட மாநிலங்களையும் தாண்டி பாகிஸ்தானை எட்டியது என்பதுதான் இப்போது பலரின் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களுடன் ஏராளமான புதிய சமூக வலைதளக் கணக்குகளும், பக்கங்களும் பாகிஸ்தானிலிருந்து திடீரெனத் தொடங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் குறைந்த செலவில் ஆட்கள் கிடைப்பதால், யாரோ திட்டமிட்டு இத்தகைய “பெய்டு”  வீடியோக்களை வெளியிட வைக்கிறார்களோ என்ற சந்தேகமும் பலமாக எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், தவெக அரசை ஒரு “ரீல்ஸ் அரசு” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், “ஆதாரமற்ற செய்திகளையும், அடிப்படை இல்லாத தகவல்களையும் சமூக வலைதளங்களில் பரப்புவதற்குத் தவெக அரசுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, அண்மையில் விஜய் பாகிஸ்தானுக்குச் சென்றது போலவும், அங்கு இம்ரான் கானைச் சந்தித்தது போலவும் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அவர் சாடியுள்ளார். ஒரு மாநில முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி கட்டாயம் தேவை எனும் நிலையில், இதுபோன்ற கற்பனையான கதைகளைப் பரப்புவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

சமூக வலைதளங்கள் மூலம் பிம்பத்தை உருவாக்குவதில் காட்டும் ஆர்வம், நிஜமான மக்கள் பணிகளில் இருக்கிறதா என்ற விவாதமும் இப்போது சூடுபிடித்துள்ளது. பாகிஸ்தான் இன்ப்ளூயன்ஸர்களின் இந்த அதிரடி ஆதரவு விஜய்க்குப் பலமா அல்லது பலவீனமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.