இலங்கை அணிக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நோ-பால்களை வீசியது கவனம் பெற்ற நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் அதற்கு ஒரு வித்தியாசமான தீர்வை முன்வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ-பால் வீசும் பந்துவீச்சாளருக்கு ஃப்ரீ ஹிட் வழங்குவதற்குப் பதிலாக, பண அபராதம் விதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பந்துவீச்சாளர்கள் தங்களது ரன்-அப்பை சரியாக அளந்து பயிற்சி செய்வதன் மூலம் முன்கால் கோட்டைத் தாண்டுவதைத் தவிர்க்க முடியும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே, முழுமையாக வீரரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத் தவறுக்கு பொருளாதார ரீதியாகவும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

கவாஸ்கர் முன்வைத்துள்ள முறையில், முதல் நோ-பாலுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டால், அடுத்த நோ-பாலுக்கு ரூ.2,000, அதற்குப் பிறகு ரூ.4,000 என ஒவ்வொரு தவறுக்கும் அபராதத் தொகையை இரட்டிப்பாக்கலாம். மேலும், பந்துவீச்சு பயிற்சியாளரிடமும் அபராதத் தொகையில் பாதியை வசூலிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். வசூலிக்கப்படும் பணத்தை அணியின் இறுதி இரவு விருந்துக்கு பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளார்.

இந்திய பந்துவீச்சாளர்களின் நோ-பால் பிரச்சினை குறித்து இந்தியாவின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலே நகைச்சுவையாக டெஸ்ட் போட்டிகளிலும் நோ-பாலுக்கு ஃப்ரீ ஹிட் வழங்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு கவாஸ்கர் உடன்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கெனவே பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது எளிதாகியுள்ள நிலையில், நோ-பாலுக்குப் பிறகு கூடுதல் சாதகத்தை வழங்குவது சரியானதாக இருக்காது என்பதே அவரது வாதம்.