‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் பின்னணியில் யாருடைய சிந்தனைகள் இடம்பெற்றன என்பது தொடர்பான பழைய விவாதம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் அமீர் கான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, திரைப்படம் உருவாக்கப்பட்ட காலத்தில் சோனம் வாங்சுக்கை தமக்குத் தெரியாது என்றும், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் எழுத்தாளர் அபிஜாத் ஜோஷிக்கும் அவரைப் பற்றி தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு சோனம் வாங்சுக் தனது பாணியில் பதிலளித்துள்ளார். பிரகார் குப்தாவுடனான காணொளி உரையாடலில் அமீர் கான் கூறிய கருத்து குறித்து பேசிய அவர், கடந்த காலத்தில் அமீர் கான் தனது உரையைப் பார்த்த காணொளி ஒன்று வெளியானதை நினைவுபடுத்தியுள்ளார். அப்போது அமீர் கான் ‘கஜினி’ திரைப்பட கதாபாத்திர தோற்றத்தில் இருந்ததாகக் கூறிய வாங்சுக், அந்தக் கதாபாத்திரம் காரணமாகவே சந்தித்ததை மறந்துவிட்டாரோ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
😂 आमिर खान: “मैं सोनम वांगचुक को जानता ही नहीं था…”
सोनम वांगचुक: शायद ‘गजनी’ का असर अभी भी है! 😂#AamirKhan #SonamWangchuk pic.twitter.com/q6lGzA5tcC— Anchal mahar (@AnchalMahar) August 30, 2026
மேலும், அமீர் கானை தான் சந்தித்ததாகவும், இருவரும் பல்வேறு கருத்துகள் மற்றும் யோசனைகள் குறித்து நீண்ட நேரம் பேசியதாகவும் வாங்சுக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் தனது வாழ்க்கையை நேரடியாக அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறவில்லை. தன்னுடைய கல்வி சிந்தனைகளில் இருந்து ஏதேனும் ஒரு யோசனை திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையே அவர் முன்வைத்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு வெளியான ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் மாணவர்களின் கல்வி அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள், நட்பு மற்றும் எதிர்காலத் தேர்வு உள்ளிட்ட விஷயங்களை மையமாகக் கொண்டது. திரைப்படத்தின் கதாநாயகன் ராஞ்சோவின் கல்வி அணுகுமுறைக்கும் வாங்சுக்கின் கல்விச் சிந்தனைகளுக்கும் இடையே ஏற்கெனவே ஒற்றுமைகள் இருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போது அமீர் கான் மற்றும் சோனம் வாங்சுக் கருத்துகளால் அந்தப் பழைய விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
