தமிழக வெற்றிக் கழகம்  தலைமையிலான ஆட்சியில் டெண்டர் தொடர்பான விதிமீறல்கள் நாள்தோறும் தொடர்கதையாக மாறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, நேரடியாக முதலமைச்சர் விஜய் அவர்களின் வசமுள்ள முக்கியத் துறைகளின் கீழ் வெளியிடப்படும் பல்வேறு டெண்டர்கள் எவ்வித முறையான கால அவகாசமும் இன்றி, மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் வெளியிடப்பட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

போதிய அவகாசம் வழங்காமல் டெண்டர்களை அவசரகதியில் முடிப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் தகவல்கள் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.

இதற்குச் சான்றாக, பேரூராட்சி இயக்ககத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வாரச்சந்தை குறித்த டெண்டரைச் சமர்ப்பிக்க வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மிக முக்கியமான சமூக நலக்கூடத்திற்கான டெண்டரைச் சமர்ப்பிக்கவும் வெறும் 5 நாட்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெண்டர் விதிகளின்படி ஒப்பந்ததாரர்களுக்கு உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் மீறப்பட்டு, இப்படி அவசரமாக டெண்டர்கள் கோரப்படுவது எந்த நலனுக்காக என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

நிர்வாகப் தன்மை கேள்விக்குறியாகி வரும் நிலையில், அவகாசக் காலத்தைக் குறைத்து வெளியிடப்படும் இந்த டெண்டர்கள் குறிப்பிட்ட சிலருக்குச் சாதகமாக மாற்றப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த விவகாரத்தில் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வரும் சூழலில், அரசின் இந்த அதிரடி டெண்டர் நடைமுறைகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.