கேரளா மாநிலத்தில் குட்டிஆட்டூர் – கண்ணூர் இடையே இயங்கும் ‘பார்வதி’ என்ற தனியார் பேருந்தில், ஏற முயன்ற முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கீழே விழப் பார்த்தபோது, பேருந்தின் கிளீனர் நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு அவரைத் தாங்கிப் பிடித்து உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. லேசான நிறச் சட்டையும் வெள்ளை முண்டும் அணிந்த முதியவர் ஒருவர் பைகளுடன் பேருந்தின் வாசலில் ஏற முயன்றபோது, திடீரென நிலைதடுமாறி பின்னோக்கி விழத் தொடங்கினார்.
அப்போது நுழைவாயில் அருகே நின்றுகொண்டிருந்த அஜுல் குக்கு என்ற பேருந்து கிளீனர், முதியவர் விழுவதைக் கண்ட அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் தனது கைகளை நீட்டி அவரைத் தாங்கிப் பிடித்தார். அருகிலிருந்த மற்றொரு நபரும் ஓடிவந்து உதவ, இருவரும் சேர்ந்து அந்த முதியவரைப் பத்திரமாகப் பேருந்திற்குள் ஏற்றி நிலைநிறுத்தினர். கிளீனரின் இந்தச் சுறுசுறுப்பான மற்றும் சமயோசிதமான நடவடிக்கையால், ஒரு பெரிய அசம்பாவிதமும் ஆபத்தான விபத்தும் தவிர்க்கப்பட்டது.
A True Saviour!
A bus cleaner became a guardian angel for an elderly passenger who nearly fell while boarding the bus.
With quick reflexes and presence of mind, Atul Kuku, the cleaner of the Parvathi bus operating on the Kuttiattoor–Kannur route, immediately stepped in and… pic.twitter.com/PtnMcIguWJ
— Karnataka Portfolio (@karnatakaportf) August 29, 2026
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், கிளீனர் அஜுல் குக்குவின் இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதேவேளையில், பயணிகள் முழுமையாகப் பேருந்திற்குள் ஏறி நிலையாக நிற்பதற்கு முன்பே பேருந்தை இயக்கும் ஓட்டுநர்களின் அவசரப் போக்கைக் கண்டித்தும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைக் (Automatic Doors) கட்டாயமாக்க வேண்டும் என்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் கேரளா முழுவதும் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.
