சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சாகுல் ஹமீது (29) என்ற நபர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்திப் படுகொலை செய்யப்பட்டவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சாகுல் ஹமீது என்பதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார், கொலையாளிகள் யார், எந்தக் காரணத்திற்காக இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியது என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொலையாளிகளைத் தேடும் பணிகளைப் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
