நவீன கால இயந்திரத்தனமான வாழ்க்கையில், மனிதநேயமும் பாசமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்பதற்குச் சான்றாக அமையும் ஒரு நிகழ்வுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியருக்கு ராக்கி கட்டி அழகு பார்த்த நிகழ்வு, மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

வதோதராவைச் சேர்ந்த ஆகாங்ஷா சிங் என்ற பெண், ரக்ஷா பந்தன் திருநாளைச் சற்று வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளார். தன் வீட்டுக் கதவைத் தட்டிய டெலிவரி ஊழியரிடம் அன்போடு பேசி, அவரது கையில் ராக்கி கயிற்றைக் கட்டியுள்ளார். அந்தத் தருணத்தின் நெகிழ்ச்சியோடு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் குனிந்து வணங்கி ஆசியும் பெற்றுள்ளார்.

இந்த எதிர்பாராத செயலால் அந்த டெலிவரி ஊழியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தத்தில் திக்குமுக்காடிய அவர், உடனே தனது பாக்கெட்டிலிருந்து ஒரு 50 ரூபாய் நோட்டை எடுத்து ஆகாங்ஷா சிங்கிற்குப் பரிசாக வழங்க முயன்றுள்ளார். அவர் மறுத்தபோதும்இப்போ நீ என்னை தங்கச்சின்னு சொல்லிட்ட இல்ல என்று புன்னகையுடன் வற்புறுத்திக் கொடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Akanksha singh. (@kan.shhha)

இந்தச் சம்பவம் குறித்து ஆகாங்ஷா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சில பரிசுகள் விலைமதிப்பற்றவை; அது வெறும் 50 ரூபாயாக இருந்தாலும் சரி! நாங்கள் அந்தப் பணத்தை ‘வாங்கவில்லை’; அது ஒரு நினைவகம், ஒரு ஆசீர்வாதம், சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த ஒரு மனிதனின் தூய்மையான அன்பும் மரியாதையுமாகும்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஒரு டெலிவரி வேலையில் 30 ரூபாய் சம்பாதிப்பதற்கே எவ்வளவு கஷ்டம் இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர் தன் கைப்பணத்திலிருந்து 50 ரூபாய் பரிசளித்துள்ளார் என்றால் அது சாதாரணமானது அல்ல” என்று ஒரு பயனர் நெகிழ்ந்துள்ளார். மற்றொருவர், “எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி, என்னை அண்ணனாக நினைத்து எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று அவர் சொன்ன அந்த வார்த்தை அவரின் பெரிய மனதைக் காட்டுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

எண்ணிக்கைகளில் அடங்காத அன்பும், எதிர்பார்ப்புகளற்ற மனிதநேயமும் எங்குமிருக்கிறது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.