கேரளாவில் பேருறியில் ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழவிருந்த நிலையில், பேருந்து கிளீனரின் மின்னல் வேகச் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தில், குட்டியாட்டூ – கண்ணூர் வழித்தடத்தில் இயங்கும் ‘பார்வதி’ என்ற பேருந்தில் பணிபுரியும் கிளீனர் அதுல் குக்கு என்பவர் செய்த சாதனை இடம்பெற்றுள்ளது.

அப்பேருந்தில் முதியவர் ஒருவர்  கையில் பைகளுடன் பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்குச் சென்றுள்ளார். இதைக் கவனித்த கதவு அருகில் நின்றுகொண்டிருந்த கிளீனர் அதுல், கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைப் பாய்ந்து பிடித்துக் கொண்டார். உடனே மற்றொருவரும் உதவிக்கு வர, இருவரும் சேர்ந்து அந்த முதியவரைச் பத்திரமாகத் தாங்கிப் பிடித்தனர். முதியவர் முழுமையாகத் தன் காலில் நிற்கும் வரை அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டதன் மூலம், பெரிய விபத்து நொடிகளில் தவிர்க்கப்பட்டது.

 

அதுலின் இந்தத் துரிதச் செயல் மற்றும் சமயோசித புத்தியைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், இந்தச் சம்பவம் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதங்களையும் எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் பயணிகள் ஏறும் முன்பே அல்லது அவர்கள் முழுமையாக உள்ளே சென்று அமரும் முன்பே பேருந்து இயக்கப்படுவதை ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாக முதியவர்கள் ஏறும் போது கூடுதல் கவனம் தேவை என வலியுறுத்தினர்.

மேலும் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சில பயனர்கள் யோசனை தெரிவித்தனர். எது எப்படியாயினும், அதுலின் அந்தத் துரித விழிப்புணர்வு முதியவரின் உயிரைக் காப்பாற்றியதுடன், பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.