ஆந்திரப் பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் அரங்கேறிய ஒரு சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் கோதாவரி நதியில் இளம் தம்பதியர் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நிலையில், பாலத்தில் தனியாக விடப்பட்ட 3 வயது சிறுவனின் கதறல் அனைவரையும் உலுக்கியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் வெல்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் தொட்டா சாய் (29), இவரது மனைவி ஷீரீஷா (28). கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நேரத்தில், இந்தத் தம்பதியர் தங்களது 3 வயது ஆண் குழந்தையுடன் ஒரு ஸ்கூட்டரில் கோதாவரி ஆற்றின் பாலத்திற்கு வந்துள்ளனர்.
இரவு 10 மணியளவில், யாரும் எதிர்பாராத நேரத்தில் குழந்தையை ஸ்கூட்டரிலேயே விட்டுவிட்டு, ஆக்ரோஷமாகப் பெருகியோடும் கோதாவரி நதியில் இருவரும் குதித்துள்ளனர். இதனால் அந்தப் பச்சிளம் குழந்தை இருளிலும் குளிரிலும் பரிதவித்துப் போய் தனியாக நின்றது.
பாலத்தில் தனியாக நின்றுகொண்டு அந்தச் சிறுவன் “அம்மா… நான்னா…” என்று அழுது அழைத்ததைக் கவனித்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், உடனடியாக அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது பெற்றோர்கள் யாருமின்றி குழந்தை மட்டும் தவிப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டு, அவர்கள் வந்த ஸ்கூட்டரையும் கைப்பற்றினர். பின்னர் அச்சிறுவன் உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான். இதற்கிடையில், நதியில் குதித்த தம்பதியரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
போலீசார், உள்ளூர் மீட்புக் குழுவினர், நீச்சல் வீரர்கள் மற்றும் படகுத் துறையினர் உதவியுடன் கோதாவரி ஆற்றில் காணாமல் போன தம்பதியரைத் தேடும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இச்செய்தி சேகரிக்கப்படும் வரை அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது பற்றிய விசாரணையில், கணவன் சாய் ஒரு ஓட்டுநராக வேலை செய்து வந்ததும், சில காலம் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்துவிட்டு ஆந்திரா திரும்பியதும் தெரியவந்துள்ளது. அவர் அதிக கடன் சுமை மற்றும் நிதிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், கடன் தொல்லை காரணமாகவே அவர்கள் தங்களது வீட்டை விற்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், நிதி நெருக்கடி மட்டுமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியர் இத்தகைய சோக முடிவை எடுப்பதற்கான உண்மையான சூழ்நிலைகள் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
