தெலுங்குத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று இந்தியத் திரையுலகையே தன் நடனத்தாலும், அபாரமான நடிப்பாலும் வியக்க வைத்து வரும் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், தனது திரைப் பயணத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.

‘புஷ்பா’ திரைப்படத்தில் தேசிய விருதை வென்று பான்-இந்தியா அளவில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நிறுவியதைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ (Forbes India) இதழின் மதிப்புமிக்க ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாகப் இடம் பிடித்து மாபெரும் பெருமை சேர்த்துள்ளார்.

பிராந்திய சினிமாவின் எல்லைகளைத் தகர்த்து, இந்திய அளவில் மாபெரும் கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்திய மிகச்சில நட்சத்திரங்களில் அல்லு அர்ஜுன் முதன்மையானவராகத் திகழ்கிறார். ‘புஷ்பா 1: தி ரைஸ்’ மற்றும் ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகிய திரைப்படங்களின் உலகளாவிய வசூல் சாதனைகளும், அவர் உருவாக்கிய ஸ்டைல் மற்றும் மேனரிசங்களும் அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டன.

அவரது இந்த பிரம்மாண்டமான பிராண்ட் மதிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வர்த்தக ஆதிக்கம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உள்ள ஈர்ப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் விதமாகவே ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்த அரிய அங்கீகாரத்தை அவருக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது முன்னணி இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுனுக்கு, இந்த சர்வதேச அங்கீகாரம் மேலும் ஒரு பெரும் மகுடமாக அமைந்திருக்கிறது.

ஒரு தென்னிந்திய நடிகர் தேசிய விருதை வென்றதோடு நிறுத்தாமல், வணிக உலகிலும் உச்சம் தொட்டு ஃபோர்ப்ஸ் அட்டைப்படத்தில் கம்பீரமாக வீற்றிருப்பது, இந்திய சினிமா உலகிற்கு அவர் அளித்துள்ள உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த தகுந்த சான்றாகும்.