கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள காரப்பள்ளி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது அமைச்சர் அருண்ராஜ் நேரில் வருகை தந்து மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தார். மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளுக்குச் சென்று நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
அமைச்சர் ஆய்வை முடித்துவிட்டுப் புறப்படத் தயாரான போது, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்த தம்பதி ஒருவர் தங்கள் கை குழந்தையுடன் அமைச்சரை அணுகினர். அமைச்சரிடம் தங்கள் குழந்தையைக் கையில் வழங்கி, “எங்கள் குழந்தைக்கு நீங்களே ஒரு நல்ல பெயரைச் சூட்ட வேண்டும்” என்று அன்போடு கோரிக்கை வைத்தனர். தம்பதியின் இந்தக் கோரிக்கை அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தையைக் கையில் வாங்கி அன்போடு கொஞ்சிய அமைச்சர் அருண்ராஜ், பெற்றோர் எதிர்பாராத ஒரு சுவாரசியமான பதிலை அளித்தார். “குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் குடும்ப பெரியவர்களுக்கும் தான் முழுமையாக இருக்கிறது. எனவே, உங்கள் வீட்டில் உள்ள அம்மா, அப்பாவிடம் ஆலோசித்து ஒரு நல்ல பெயரை பார்த்துச் சூட்டுங்கள்” என்று புன்னகையுடன் அன்போடு அறிவுறுத்தினார்.
வழக்கமாக தலைவர்கள் பெயர் சூட்டும் நடைமுறையிலிருந்து வேறுபட்டு, குடும்ப உறவுகளுக்கு முன்னுரிமை அளித்த அமைச்சரின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்தது. அதோடு மட்டுமில்லாமல், தனது அன்பின் அடையாளமாக அந்தப் பிஞ்சு குழந்தைக்குத் தன் கைப்படப் பணப்பரிசு வழங்கிய அமைச்சர், தம்பதிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
