பூமிக்கு மேலே 30 கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து கீழே விழும் ஒரு ஸ்மார்ட்போன் என்னவாகும்? எல்கை தாண்டி நசுங்கித் தூள்தூளாகிவிடும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், சுவீடன் நாட்டின் வானில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன், எந்தவிதச் சேதமும் இல்லாமல் தப்பியுள்ளதுடன், கின்னஸ் சாதனையையும் படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவீடன் நாட்டின் கிரூனா நகருக்கு மேல் பகுதியில், கடந்த ஜூன் 24, 2026 அன்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ஒரு பிரம்மாண்டமான உயரமான பலூன் மூலம் விண்ணின் அடுக்கு மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த ஸ்மார்ட்போன், அங்கிருந்து கீழே பனிப்பரப்பு மற்றும் இயற்கையான நிலப்பரப்பை நோக்கித் தள்ளிவிடப்பட்டது.
சுமார் 30,607 மீட்டர் உயரத்தில் (30 கிலோமீட்டருக்கும் மேல்) இருந்து கீழே விழத் தொடங்கிய அந்தச் சாதனைக் கைப்பேசி, சுவீடன் நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் இயற்கையான நிலப்பரப்பை அடைய சுமார் 25 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக மிக வேகமாகப் பாய்ந்து வந்த அந்தத் தொலைபேசியை, குழுவினர் துல்லியமாகப் பின்தொடர்ந்து சென்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்த போதிலும், அந்த ஸ்மார்ட்போனில் எந்த ஒரு பெரிய சேதமும் ஏற்படவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமான உண்மை. மீட்கப்பட்ட அந்தத் தொலைபேசியை ஆன் செய்து பார்க்க முடிந்ததோடு, அதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும், புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது. முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் அது இயங்கியது சோதனைக் குழுவினரை உச்சி குளிரச் செய்தது.
இந்தச் சாதனத்திற்குக் காரணமாக இருந்தது, RHINOSHIELD நிறுவனத்தின் AirX பாதுகாப்பு கேஸ்தான். அதிவேகமாக தரையில் மோதும் போது உருவாகும் கடும் ஆற்றலை உறிஞ்சி, அதைத் திசைதிருப்பும் வகையில் இந்த கேஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுவே போனின் உள்ளே இருக்கும் நுட்பமான பாகங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியது.
மேலும், சுமார் 30 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் கடும் குளிரான -40°C முதல் -60°C வரையிலான வெப்பநிலை மற்றும் கடல் மட்ட அழுத்தத்தில் வெறும் ஒரு சதவீதமாகக் குறையும் குறைந்த காற்று மண்டல அழுத்தம் என அத்தனை சூழல்களையும் அந்த போன் தாக்குப் பிடித்துள்ளது.
விண்கலங்கள் செல்லும் விண்வெளிக்கு இது செல்லவில்லை என்றாலும், சாதாரண விமானங்கள் பறக்கும் உயரத்தையும் தாண்டி ஸ்டேட்டோஸ்பியர் மண்டலத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனை, மொபைல் போன் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
