சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மழையை நிறுத்துவதற்காக எலுமிச்சைப் பழத்தை வெட்டியதாக பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலோட் மாவட்டம் டூண்டிலோரா பகுதியில் நடைபெற்ற ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சிக்கு முன்பாக வானிலை மோசமாக இருந்ததால் மழை பெய்யும் சூழல் நிலவியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சி பாதிக்கப்படலாம் என்ற நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக், முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்த நிலையில், மழை பெய்யாமல் இருக்க பிரார்த்தனை செய்ததாகக் கூறினார். பின்னர் ஒரு எலுமிச்சைப் பழத்தை வெட்டியதாகவும், அதன் பிறகு மழை நின்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டதால், அதன்பிறகு மழை பெய்தாலும் கவலை இல்லை என்றும் அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சைக் கேட்ட மேடையில் இருந்த முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் உள்ளிட்டோர் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். “எலுமிச்சைப் பழத்தை வெட்டுவதன் மூலம் மழையை நிறுத்த முடியும் என்றால், நாட்டில் உயர்ந்து வரும் சர்க்கரை விலை மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கவும் ஒரு எலுமிச்சைப் பழத்தை வெட்டுங்கள்” என அவர் நையாண்டியாகக் கூறியுள்ளார். இதன் மூலம் எம்.பி.யின் கருத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதற்கிடையே, எலுமிச்சைப் பழத்தை வெட்டியதால் மழை நின்றதாகக் கூறிய விவகாரம் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. மழை போன்ற இயற்கை நிகழ்வுகளை இதுபோன்ற செயல்களுடன் தொடர்புபடுத்துவது அறிவியல் ரீதியாக ஏற்கத்தக்கதா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதே முறையில் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் அன்றாடச் செலவுகளையும் குறைக்க முடியுமா என சிலர் கேலி செய்து வருகின்றனர். இதனால் பாஜக எம்.பி.யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.