கிரிக்கெட் என்பது வெறும் புள்ளிவிவரங்களும் சாதனைகளும் மட்டுமல்ல; அது வியர்வையும், வலியும், விடாமுயற்சியும் கலந்த ஒரு உணர்வுப் போராட்டம். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட் தனக்குத் தந்த வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இந்திய அணியின் ஒட்டுமொத்த முயற்சியையும் பாராட்டி பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அந்தப் போட்டியின் போது தான் வாங்கிய பலத்த காயத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் குறிப்பிட்ட விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாராவின் பவுன்சர் பந்து ஒன்று முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்தின் தோள்பட்டையில் மிகக் கடுமையாகத் தாக்கியது. இதனால் அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். ஆனாலும், அணியின் நலனுக்காக வலியைக் பொருட்படுத்தாமல் இரண்டாம் நாள் ஆட்டத்தில் மீண்டும் களமிறங்கிய அவர், துணிச்சலாகப் போராடி 89 பந்துகளில் 63 ரன்களைக் குவித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
View this post on Instagram
இந்தக் காயம் காரணமாக அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை. அவருக்குப் பதிலாக துருவ் ஜூரெல் அந்தப் பணியைத் தொடர்ந்தார். போட்டி முடிவுக்கு வந்த பிறகு, தனது தோள்பட்டையில் ஏற்பட்ட படுகாயத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பந்த், அதன் மேல் “A little souvenir” (ஒரு சிறிய நினைவுப் பரிசு) என்று குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ரிஷப் பந்த், “டெஸ்ட் கிரிக்கெட் சில சமயங்களில் உங்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் சிலிர்ப்பையும், சில சமயங்களில் அதைவிட மேலான பல அனுபவங்களையும் தரும்…” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது பதிவில் கூறியதாவது,
“அடிகள், கிண்டல்கள், நம்பிக்கைகள் மற்றும் ஒவ்வொரு ரன்னுக்காகவும், ஒவ்வொரு விக்கெட்டுக்காகவும், ஒவ்வொரு கணத்திற்காகவும் ஐந்து நாட்கள் தொடர்ந்து போராடியது என இந்தத் தொடர் அமைந்தது. இந்தத் தொடரை நாங்கள் 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றிருக்க விரும்பினோம்; ஆனால், இலங்கை பேட்டர்கள் காட்டிய நம்ப முடியாத போராட்டம் எங்களை இதற்காகக் கடுமையாக உழைக்க வைத்தது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் கோப்பை வென்ற தருணம், சக வீரர்களின் கொண்டாட்டம், மழையில் நனைந்தபடி ரசிக்கும் தருணம் மற்றும் தனது காயத்தின் புகைப்படம் உள்ளிட்ட பல படங்களை அவர் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். மேலும், மைதானத்தில் மழையில் நனைந்தபடி தனது காயத்தைத் தாங்கியபடியே ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு அவர் கலகலப்பாகப் பதிலளித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
