கிரிக்கெட் களத்தில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படியொரு சிலிர்க்க வைக்கும் கணத்தைத்தான் லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் மாற்று வீரர் சல்மான் அலி ஆகா இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்த ஒற்றைக் கை கேட்ச், தற்போது கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இணையத்தில் ஒரு விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

போட்டியின் முதல் நாள் ஆட்டம் அது. இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜோர்டான் காக்ஸ் மிகவும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்திருந்தார். ஜேமி ஸ்மித்துடன் இணைந்து ஜோடியாக நின்ற அவர், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சோதித்துக் கொண்டிருந்தார். இந்த ஜோடி ஏற்கனவே 67 ரன்கள் சேர்த்து பாசுக்கு அச்சுறுத்தலாக விளங்கியது.

 

அப்போது குர்ரம் ஷாசாத் வீசிய பந்து காக்ஸின் பேட்டின் வெளிப்புற விளிம்பைத் தொட்டுக்கொண்டு இரண்டாவது ஸ்லிப் திசையை நோக்கி வேகமாகப் பறந்தது. அந்தத் திசையில் மாற்று ஆட்டக்காரராகக் களத்தில் நின்றிருந்த சல்மான் அலி ஆகா, சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் வலதுபுறமாக முழு நீளத்திற்குப் பாய்ந்தார். காற்றில் பறந்தபடி அவர் தனது ஒற்றைக் கையால் பந்தைக் பிடித்த  விதம், மைதானத்தில் இருந்த அனைவரையும் வாயடைக்கச் செய்தது.

இந்தத் துல்லியமான மற்றும் அசாத்தியமான கேட்ச் மூலம் ஜோர்டான் காக்ஸின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணிக்கு இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

இந்த அற்புத கேட்ச் ஒருபுறம் பாராட்டுக்களைப் பெற்றாலும், மறுபுறம் சமூக வலைதளங்களில் கலகலப்பான விவாதத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் என்றாலே கைக்கு வரும் எளிமையான கேட்சுகளைக் கூடத் தவறவிடுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு அணி இப்படிப்பட்ட ஒரு உலகத்தரமான கேட்சைப் பிடித்ததை நெட்டிசனர்களால் உடனடியாக நம்ப முடியவில்லை.

இதனாலேயே, “இது நிஜமான வீடியோவா அல்லது ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மார்பிங் காட்சியா?” என்று பலரும் கிண்டலாகவும் ஆச்சரியமாகவும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் வழக்கமான சொதப்பலான ஃபீல்டிங்கிற்கும், சல்மானின் இந்த அதியசயமான கேட்சுக்கும் உள்ள முரண் நெட்டிசன்களுக்குச் சிறந்த மீம் மெட்டீரியலாக மாறிவிட்டது.

இந்தச் சிறப்பான திருப்புமுனைக்குப் பிறகு பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மிரட்டலாகச் செயல்பட்டது. முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும், முகமது அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியை 248 ரன்களுக்கு (9 விக்கெட் இழப்பு) திணறடித்தனர். முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி எழுச்சி பெற்றுள்ளதைச் சல்மானின் இந்த மாயாஜால கேட்ச் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.