பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள், சிறுவர்கள் மற்றும் டீனேஜர்களை அடிமையாக்கி அவர்களின் மனநலனைப் பாதிப்பதாகக் கூறி, அமெரிக்காவின் 47 மாநிலங்கள் மற்றும் பிற பகுதிகள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கில் சுமார் $17 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.4 லட்சம் கோடிக்கும் மேல்) அபராதம் செலுத்துவதற்கும், டீனேஜ் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தங்கள் செயலிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டு உடன்படிக்கை செய்துள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், 18 வயதுக்கு உட்பட்ட டீனேஜர்கள் இனி தினமும் அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த முடியும். மேலும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ஆப் பயன்பாடு தானாகவே பிளாக் செய்யப்படும்.
பள்ளி நேரமான காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆப் நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் முடக்கப்படும். பயன்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள், 60 நிமிடங்கள் மற்றும் 90 நிமிடங்கள் செயலியைப் பயன்படுத்தும்போது, இடைவேளை எடுக்குமாறு தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகளும் திரையில் தோன்றும்.
மேலும், டீனேஜர்களின் ஒப்பீட்டு மனப்பான்மையையும் மன அழுத்தத்தையும் குறைக்க, லைக்ஸ் (Likes) எண்ணிக்கை மற்றும் பியூட்டி பில்டர்கள் (Cosmetic procedure filters) மறைக்கப்படும். பெற்றோர்கள் தங்களின் கண்காணிப்பு வசதி (Parental controls) மூலம் இந்த பயன்பாட்டு நேரங்களை மாற்றியமைக்கவோ அல்லது கட்டுப்பாடுகளைக் கூட்டவோ முடியும்.
இது தவிர, அல்காரிதம் மூலம் தொடர்ச்சியாக வரும் வீடியோக்களுக்குப் பதிலாக, சாதாரணமான முகப்புப் பக்கத்தை (Non-personalised feed) அமைத்துக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களுக்குள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், வயது சரிபார்ப்பு (Age verification) தொடர்பான சில கடினமான மாற்றங்கள் அமலுக்கு வர சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகிலேயே நிறுவனங்களின் கட்டமைப்பு விதிகளை மாற்றியமைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக இது பார்க்கப்படுகிறது.
