தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இதுவரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு, இனிமேல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பசியைப் போக்கி அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடியான அரசாணைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தின் விரிவாக்க விழா நிகழ்ச்சியானது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் கல்வி பயின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விருதுநகர் கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்காக வரும் செப்டம்பர் 17 அன்று முதல்வர் விஜய் அவர்கள் நேரில் விருதுநகர் பயணம் மேற்கொண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியிலிருந்து தொடங்கப்பட உள்ள இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
