இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள், செல்போன், கணினி மற்றும் டிவி எனத் திரைகளுக்கு முன்னால் அதிக செலவிடுகின்றனர். இதனால் இந்தியாவில் 5 முதல் 6 வயதுடைய சிறிய குழந்தைகளுக்குக்கூடக் கிட்டப்பார்வை (மயோப்பியா) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதும், வெளிப்புற விளையாட்டுகள் குறைந்துபோனதுமே இந்த கிட்டப்பார்வை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும். இதற்குத் தீர்வாக, குழந்தைகள் தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது இயற்கையான பகல் வெளிச்சத்தில் வெளியில் விளையாட வேண்டும் என்று கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பகல் வெளிச்சம் கண்களில் டோபமைன் என்ற வேதிப்பொருளைச் சுரக்கச்செய்து, கண் விழி அளவுக்கு அதிகமாக நீள்வதைத் தடுக்கிறது. இதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது. குழந்தைகள் வெயிலில் அலைய வேண்டியதில்லை, பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களின் நிழலான இடங்களில் விளையாடினாலே போதுமானது.
திரைகளைப் பயன்படுத்தும்போது 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். அதாவது, 20 நிமிடங்கள் திரையைப் பார்த்த பிறகு, 20 நொடிகள் 20 அடி தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளைப் பார்க்க வேண்டும். மேலும், போதிய வெளிச்சத்தில் சரியான தூரத்தில் வைத்துப் படிக்கும் பழக்கத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
குழந்தை அடிக்கடி கண்களைச் சுருக்கிப் பார்த்தாலோ, டிவிக்கு மிக அருகில் சென்று அமர்ந்தாலோ அல்லது தலைவலி என்று கூறினாலோ உடனடியாகக் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 2 மணி நேரம் வெளியில் விளையாட வைப்பதும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வதும் குழந்தைகளின் பார்வையை எதிர்காலத்தில் பாதுகாப்பாக வைக்கும்.
