இன்றைய காலகட்டத்தில் பலர் ஏசி அறைகளிலும், நான்கு சுவர்களுக்குள்ளும் அதிக நேரத்தைச் செலவிடுவதால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் “சூரிய ஒளி வைட்டமின்” எனப்படும் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது. நாள் முழுவதும் எப்போதும் சோர்வாக உணர்வது, அடிக்கடி எலும்பு மற்றும் தசை வலி ஏற்படுவது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் தலைமுடி உதிர்வது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
வயது முதிர்வு, அதிக மெலனின் கொண்ட சரும அமைப்பு மற்றும் சூரிய ஒளியே படாத வாழ்க்கை முறை ஆகியவையே உடலில் வைட்டமின் டி அளவு குறைவதற்குக் முதன்மையான காரணங்களாகும். உடலில் இந்த வைட்டமின் குறைந்தால், அது உயர் இரத்த அழுத்தம், இன்சுலின் சுரப்பில் பாதிப்பு மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பல தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.
இந்தக் குறைபாட்டைச் சமாளிக்கக் காளான், பால், தயிர், முட்டை மற்றும் மீன் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும், தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது அரை மணி நேரமாவது சூரிய ஒளியில் செலவிடுவது உடலில் இயற்கையாகவே இந்த வைட்டமின் உற்பத்தியாகத் துணைபுரியும்.
இருப்பினும், வைட்டமின் டி குறைவாக இருக்கிறது என்பதற்காக மருத்துவரின் ஆலோசனையின்றித் தானாகவே மாத்திரைகளையோ அல்லது மருந்தையோ எடுத்துக்கொள்ளக் கூடாது. உடலில் வைட்டமின் டி அளவு அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அது சிறுநீரகக் கற்கள், இதயப் பிரச்சினைகள், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற ஆபத்தான பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.
எனவே, இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதே சரியான வழிமுறையாகும். மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான அளவிலான மருந்துகளை உட்கொள்வதோடு, ஆரோக்கியமான உணவும் சூரிய ஒளியும் பெற்று வாழ்வதே நம் உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாகப் பாதுகாக்கும்.
