மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாநகர் பகுதியில் உள்ள கவடியா மலையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் தற்கொலை மற்றும் விபத்து சம்பவம் மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 19 வயது நீட் பயிற்சி மாணவர் குநாலைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது தந்தை முரளீதரன் (48) மற்றும் தாய் சங்கீதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடந்த 20 ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்ட குடும்ப ரகசியங்களும், கடுமையான நிலத் தகராறுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சம்பவத்தின் தொடக்கத்தில், குனால் புதிய ஐபோன் (iPhone) கேட்டுத் தந்தை மறுத்ததால் கோபித்துக்கொண்டு மலைக்குச் சென்றதாக வதந்திகள் பரவின. ஆனால், குநாலின் நண்பர்களும் உறவினர்களும் இந்தத் தகவல்களை முழுமையாக மறுத்துள்ளனர். மருத்துவராகும் கனவில் தீவிரமாகப் படித்து வந்த குநாளிடம் ஏற்கனவே இரண்டு ஐபோன்கள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் கடந்த 6 ஆண்டுகளாகக் குடும்பத்தினரிடையே நிலவி வந்த கடுமையான மன உளைச்சலும், பூர்வீகச் சொத்துத் தகராறும் தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முரளீதரனின் சொந்த ஊரான தன்ஹர் பிம்பல்கான் கிராமத்தைச் சேர்ந்த அவரது 75 வயது தந்தை தாமோதரராவ் மற்றும் தாயார் பல திடுக்கிடும் உண்மைகளைப் பகிர்ந்துள்ளனர்: அதாவது முரளீதரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடிச் சென்றபோது சங்கீதாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் குறித்துத் தன் சொந்தக் குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காததால், குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டு இடைவெளி அதிகரித்தது.
முரளீதரனின் பெயரில் இருந்த 3 ஏக்கர் நிலத்தை அவரது சகோதரிகளுக்கு அதாவது குநாலின் அத்தைகளுக்கு முரளீதரன் வழங்கியுள்ளார். இந்த முடிவால் முரளீதரனுக்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது; இது இளம் மாணவன் குனால் மீது கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தனது கணவரை அவரது சொந்தக் குடும்பத்தினரிடம் பேசவிடாமல் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகக் குநாலின் தாத்தா-பாட்டி குற்றம்சாட்டியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கவடியா மலையின் அபாயகரமான சரிவில் குனால் அமர்ந்துகொண்டார். உடனடியாக காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்கள் அங்குத் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். கீழே பாதுகாப்பு வலையும் விரிக்கப்பட்டது.
மக்களும் அதிகாரிகளும் அவரிடம் தாய் மற்றும் குடும்பத்தினரைக் குறித்துச் சிந்திக்கக் கூறியபோது, “இனி எந்த வழியும் இல்லை, ஒரே ஒரு வழிதான் மிச்சமுள்ளது” என்று குனால் கூறியுள்ளான். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தந்தை முரளீதரன் மகனைக் காப்பாற்ற முன்னேறிச் சென்றபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்தனர். கணவனும் மகனும் விழுவதைக் கண்ட தாய் சங்கீதாவும் அதிர்ச்சியில் மலையிலிருந்து குதித்தார்.
மரணத்திற்குப் பிறகும் அந்தக் குடும்பத்தின் பிரிவுகள் வெளிப்பட்டன. குனால் மற்றும் அவரது தாய் சங்கீதா ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தாய் வழி உறவினர்கள் ஊரில் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், தந்தை முரளீதரனின் இறுதிச் சடங்கு அவரது சொந்தக் கிராமத்தில் நடைபெற்றது. மகனின் முகத்தைக் கூட கடைசி முறையாகப் பார்க்க முடியாத முரளீதரனின் வயதான பெற்றோரின் துயரம் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. காவல்துறையினர் தற்போது குடும்பச் சண்டை, நிலத் தகராறு மற்றும் சமூக வலைதளப் கோணங்கள் என அனைத்து வழிகளிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
