மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், சாதாரண வாக்குவாதம் காரணமாக வளர்ப்பு நாயை ஒரு நபரின் மீது உரிமையாளரே ஏவி விட்டுப் பயங்கரமாகக் கடிக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தனது ஆபத்தான வளர்ப்பு நாயை அழைத்துச் சென்ற நபரிடம், “நாயைச் சரியாகப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள், மற்றவர்களுக்குப் பயமாக இருக்கிறது” என்று அக்கம் பக்கத்தில் இருந்த நபர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சாதாரண அறிவுரையைக் கேட்டதும் கடுப்பான நாய் உரிமையாளரின் கோபம் எல்லை மீறிப் பாய்ந்துள்ளது.

ஆத்திரத்தில் நிதானமிழந்த அந்த உரிமையாளர், நாய் போட்டிருந்த சங்கிலியைக் கழற்றிவிட்டு, அதைத் தவறு சுட்டிக்காட்டிய நபரின் மீதே நேரடியாக ஏவி விட்டுள்ளார். வெறிபிடித்தது போல் பாய்ந்த அந்த நாய், அந்த நபரின் தொடைகளிலும் பின்புறத்திலும் மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியது.

நாயின் கூர்மையான பற்கள் பட்டதில் அந்த நபரின் உடலிலிருந்து சதை பிளந்து ரத்தம் கொட்டியது. வலியால் அவர் அலறித் துடித்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மிகவும் சிரமப்பட்டு அந்த நாயை விரட்டி அடித்து அவரை மீட்டனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த நபரை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாதாரணச் சொற்களில் தொடங்கிய வாக்குவாதம், இப்படி ஒரு கொடூரமான தாக்குதலில் முடிந்தது அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த நாய் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.