மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள காரக் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவாராக் நாய்களின் தொல்லை பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக மனிதர்களையும், சிறு குழந்தைகளையும் மட்டுமே குறிவைத்து வந்த இந்த வெறிநாய்கள், தற்போது கால்நடைகளையும் விட்டுவைக்காமல் தாக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், அப்பகுதியில் திடீரெனக் கும்பலாக வந்த 4 முதல் 5 நாய்கள் ஒன்றுசேர்ந்து ஒரு ஆட்டைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளன.
இந்தத் தாக்குதலின் போது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், தங்களது குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வெளியில் அனுப்பவும் கடும் அச்சமடைந்துள்ளனர். நகரில் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் நாய்களின் வெறித்தனம் உச்சத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தானே பகுதியில் ஒரு வெறிநாய் வெறும் 7 மணி நேரத்திற்குள் 130 பேரை மாற்றி மாற்றிக் கடித்துக் குதறியது. இந்தத் தொடர் சம்பவங்கள் அம்மாநில மக்களிடையே பெரும் கலக்கத்தையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
