நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேபோல, வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் விஜய்யின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தனர்.
மற்றொருபுறம், திருச்சி கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தனியாகத் தேர்தல் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், முதலமைச்சர் விஜய்க்கும் ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதிமன்றத்தில் மீண்டும் கவனத்திற்கு வந்தது. விசாரணையின் போது முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்தரப்பு தொடர்ந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தனியாக மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகத் தங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்கத் தீர்க்கமாக மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 86-ன் படி தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த விசாரணையின்போதே மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதை நினைவூட்டிய நீதிபதி, இதேபோன்று அவகாசம் கோரிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிற்கும் அதிருப்தியைத் தெரிவித்தார். இரண்டு வார கால அவகாசத்தைக் திட்டவட்டமாக மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் நிராகரிப்பு மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும் என இறுதி கெடு விதித்தார்.
மேலும் குறிப்பிட்ட கெடுவுக்குள் மனுத் தாக்கல் செய்யத் தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தார்.
