தென் கொரியாவில் வசித்து வரும் ஹிமானி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் மிகச்சிறந்த சமூக ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். @travelandeatwith_passion என்ற கணக்கில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், வைரல் அலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருவதாகக் கூறும் ஹிமானி, தான் கண்டுகளித்த தென் கொரியப் பேருந்துகளின் தூய்மையைப் பார்த்துத் திகைத்துப் போயுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரியாவுக்கு வந்ததிலிருந்து என்னை மிகவும் ஈர்த்தது இங்கிருக்கும் பஸ்களும், மக்களும்தான். பேருந்துகளில் உள்ள பாட்டில் ஹோல்டர்கள், இருக்கைகள், ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் ஜன்னல் திரைகள் எல்லாமே மிகச் சரியாகப் பராமரிக்கப்பட்டுள்ளன” என்று வியப்புடன் தெரிவிக்கிறார்.
View this post on Instagram
பொதுவாக பல நாடுகளில் பொதுப் பேருந்துகளில் இருக்கைகளைக் கீறுவது, எழுதுவது, போன் எண்களைக் கிறுக்கி வைப்பது அல்லது ஏசி பட்டன்களை உடைப்பது போன்ற சேதப்படுத்துதல்கள் நடப்பது வழக்கம். ஆனால், கொரியாவில் பொதுமக்கள் பொதுச் சொத்துகளைத் தங்களது சொந்தப் பொருட்களைப் போலவே மிகுந்த பொறுப்புடன் பாதுகாப்பதுதான் இந்தப் பேருந்துகளின் சிறப்பம்சம் என்று அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“விஷயங்கள் இவ்வளவு அழகாகவும் சுத்தமாகவும் தெரிவதற்குக் காரணம், மக்கள் அவற்றைத் தங்களின் சொந்தப் பொறுப்பாக நினைத்துப் பாதுகாப்பதுதான்” என ஹிமானி குறிப்பிட்டுள்ள கருத்து பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும், “பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது ஒரு நல்ல குடிமகனின் தலையாய கடமை”, “நம்ம ஊரிலும் எப்போது இந்த மாற்றம் வரும்?” என்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
