5சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாட்டில், ‘டாக்ஸ்ஏஐ ரோபாட்டிக்ஸ்’  என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கியூஜி எக்ஸ்1’  எனப்படும் நான்கு கால்களுடன் கூடிய ரோபோ குதிரை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்ப்பதற்கு அச்சு அசலாகக் குதிரை போன்ற அமைப்பைக் கொண்டுள்ள இந்த மிஷினில், மனிதர்கள் அமர்ந்து பயணம் செய்வதற்காக பிரத்யேகமான சேணமும் கைப்பிடிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by China Insider (@chinainsider)

சுமார் 660 பவுண்டுகள் வரை எடையைத் தாங்கும் திறன் கொண்ட இந்த ரோபோ, சாதாரண வாகனங்கள் செல்ல முடியாத கரடுமுரடான மலைப்பகுதிகள் மற்றும் காடுகளிலும் எளிதாகப் பயணிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் கடினமான மீட்புப் பணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறைகளில் இந்த இயந்திரம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுயேச்சையான செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன உயர் மின்னழுத்த மின்கல அமைப்புகளின்  மூலம் இயங்கும் இந்த ரோபோ குதிரை, தற்பொழுது ஒரு சோதனை முயற்சியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரோபோடிக்ஸ் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஆயிரக்கணக்கான நவீன சாதனங்களுக்கு மத்தியில், மனிதர்களின் தனிப்பட்ட போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் இந்த ரோபோ பற்றிய விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.