ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் மோகித் தலால், 27 வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இளம் வயதிலேயே சிறந்த கபடி வீரராக வலம் வந்த மோகித்தின் திடீர் மரணம் குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் கபடி உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோகித் தனது சிறப்பான ரைடிங் திறமைக்காக அறியப்பட்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியாணா மற்றும் பஞ்சாபில் நடைபெற்ற பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும், கோப்பைகளையும் வென்றுள்ளார். பிரபல கபடி வீரர்களுடனும் அவர் பல போட்டிகளில் விளையாடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி துபாய், கனடா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கபடி போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு கோப்பைகளை வென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் கபடி விளையாட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருந்தார்.

நந்த்கர் கிராமத்தைச் சேர்ந்த மோகித், சுமார் 10 வயதிலேயே கபடி விளையாடத் தொடங்கியதாக கூறப்படுகிறது. கிராமத்தின் முன்னாள் மல்யுத்த வீரர் பிரகாஷின் வழிகாட்டுதலின் கீழ் அவர் மைதானத்தில் பயிற்சி பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே கபடி மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், படிப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையிலும் தொடர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்பிறகு உடல்நிலை தேறி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் கபடி மைதானத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பயிற்சியையும் தொடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

விரைவில் மீண்டும் போட்டிகளில் விளையாடுவார் என குடும்பத்தினரும் சக வீரர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோகித் திருமணம் ஆகாதவர் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவையடுத்து கிராம மக்கள், நண்பர்கள் மற்றும் கபடி வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் வயதில் திறமையான விளையாட்டு வீரரை இழந்தது ஹரியாணா பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.