அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்றை ஓட்டிச் சென்ற இளம்பெண், நடுவானில் ஏற்பட்ட திடீர் இன்ஜின் கோளாறால் அதைச் சாமர்த்தியமாகக் கடலில் தரையிறக்கிய வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

​விமானம் பறந்துகொண்டிருந்தபோதே அதன் இன்ஜின் திடீரெனப் பழுதடைந்து செயலிழந்ததால், உடனடியாக அவசர நிலையை உணர்ந்து விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்க வேண்டிய மிகக் கடினமான சூழல் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது.

​அருகில் இருந்த கட்டடங்கள் அல்லது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மீது விமானம் மோதிப் பெரிய விபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகச் செயல்பட்டுள்ளார். இதனால், சாதுரியமாக முடிவெடுத்துக் கடற்கரைக்கு மிக அருகில் இருந்த கடல் பகுதியில் விமானத்தைக் துணிச்சலாகத் தரையிறக்கினார்.

​சரியான நேரத்தில் எடுத்த இந்தச் சாமர்த்தியமான முடிவால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேறிய அந்த இளம்பெண் நீந்திக் கரைக்கு வந்து சேர்ந்தார். இக்கட்டான ஆபத்தான சூழலிலும் பதற்றப்படாமல் திறம்படச் செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்றிய அந்த இளம் பெண் பைலட்டுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.