சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கூட்டத்தில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். மேடையில் தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் பேசிய அவர், திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், திமுகவை நோக்கிப் பகிரங்க சவால்களையும் விடுத்தார்.

கூட்டத்தில் உற்சாகமாகப் பேசிய வி.எஸ்.பாபு, “எல்லோரும் சொல்கிறார்கள் விஜய் பேசுவதில்லை என்று. ஆனால், அவர் பேச ஆரம்பித்தால் எதிரிகள் அனைவரும் ஓடிப் போய்விடுவார்கள். தேர்தல் நேரத்தில் எனக்காகப் பிரச்சாரம் செய்ய நமது தலைவர் விஜய் வெறும் 5 நிமிடம் மட்டும்தான் கொளத்தூருக்கு வந்தார். தளபதி வந்தாரு, ஒரு ‘கொத்து பரோட்டா’ போட்டாரு, அத்தோடு தேர்தல் முடிந்துவிட்டது! அவர் வந்த வேகத்திலேயே கொளத்தூர் மற்றும் திரு.வி.க நகர் பகுதிகள் எல்லாம் ஜொலித்தன. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களப் பார்த்தபோதே என் வெற்றி உறுதியாகிவிட்டது” என்றார்.

திமுக தலைமைக்குச் சவால்விடும் வகையில் பேசிய அவர், “எதிரே நின்றது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அல்லது அவரது தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாக இருந்தாலும் சரி… நமது தலைவர் விஜய்யின் அலைக்கு முன்னால் தவெக-வின் வெற்றியைக் யாராலும் தடுக்க முடியாது. இந்தத் தேர்தலில் கருணாநிதியே நேரடியாகக் களத்தில் நின்றிருந்தாலும் கூட நான் அவரைத் தோற்கடித்திருப்பேன்” என அடித்துக் கூறினார்.

திமுகவின் வாரிசு அரசியலைச் சாடிய வி.எஸ்.பாபு, “திமுகவில் கடைசி வரைக்கும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பதவியில் இருப்பார்கள். முன்னாள் திமுக அமைச்சர்கள் யாராவது இனி ஒரே ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகிவிட்டால் கூட, என் ஒரு பக்க மீசையை நான் முழுமையாக எடுத்துக்கொள்கிறேன்” என்று மேடையில் பகிரங்கமாகச் சவால் விட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கே ஒன்றும் தெரியாது; இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதிக்கு பூஜ்ஜியம், ஒன்றுமே தெரியாது. இதற்கெல்லாம் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம். எதிர்காலத்தில் இவர்கள் யாரும் அரசியலில் தேற மாட்டார்கள்” என்று கடுமையாகச் சாடினார்.

தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துவிட்டதைக் சுட்டிக்காட்டிய அவர், “யாரும் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் என்று எதிரிகள் சதிச் செய்தனர். ஆனால், இன்று ஊரையே கூட்டி மாபெரும் கூட்டத்தை நிரூபிக்கக் காட்டியுள்ளார் உறுப்பினர் சிவா. இதுதான் நம் கட்சி! இனி தமிழ்நாட்டில் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது; இருக்கப்போவது நம் முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக மட்டும்தான்” என்று பெருமிதத்துடன் பேசி முடித்தார்.