ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா நகரில் உள்ள எஸ்கே நர்சிங் கல்லூரியில்நடந்த ஒரு சிறு சம்பவம், சில மணி நேரங்களில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஒரு மொபைல் போன் மாயமானதில் தொடங்கிய சிறிய பிரச்சனை வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் உள்ளூர் மாணவர்களுக்கும் இடையேயான மோதலாக உருவெடுத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று, அக்கல்லூரியில் படித்து வரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் செல்போன் திடீரெனக் காணாமல் போனது. இதுகுறித்து விசாரித்தபோது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது விஸ்வரூபம் எடுத்தது. இந்த எதிர்பாராத மோதலில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் விடுதி அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்த நள்ளிரவில் விடுதியே ஒரு போர்க்களம் போல மாறிப்போனது.

இந்த விவகாரம் உடனடியாகக் காக்கிநாடா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வரை சென்றது. தகவல் அறிந்ததும் முதலமைச்சர் அலுவலகம் உஷாரானது. ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு நேரடியாகத் தலையிட்டு, நிலைமையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவர மூத்த அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நள்ளிரவிலேயே களமிறங்கின.

வன்முறை மேலும் பரவாமல் இருக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள், அவர்களின் முழுச் சம்மதத்துடன் பாதுகாப்பான மற்றொரு தனி விடுதிக்கு மாற்றப்பட்டனர். மாணவர்களின் பாதுகாப்பிற்காக இரவு முழுவதும் ஒரு பெண் உதவி ஆய்வாளர் அந்த விடுதியிலேயே பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் தீவிரம் மணிப்பூர் வரை எட்டியது. மணிப்பூர் முன்னாள் முதல்வர் என். பிரன் சிங், ஆந்திரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மாணவர்களின் நிலைக் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உடனடி நடவடிக்கைக்கு என் நன்றிகள். மாணவர்கள் பாதுகாப்பான மற்றொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்காகப் பெண் காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்து ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட வடகிழக்கு மாநில மாணவர்கள், தங்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாகச் செய்து கொடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆந்திர அரசுக்கும் தங்களது நன்றியையும் திருப்தியையும் தெரிவித்தனர். தற்போது காக்கிநாடா நர்சிங் கல்லூரி விடுதியில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.