மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போக்கர்தன் தாலுகாவில், கணவனின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டுப் புகார் அளிக்க வந்த மனைவியே, இறுதியில் கொலைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் தனது கணவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டதாகக் கூறி, கண்ணீரும் கம்பலையுமாகப் புகாரளித்த அந்தப் பெண்ணின் நாடகத்தை, காவல்துறையினரின் கூர்மையான விசாரணைக் கோணம் தவிடுபொடியாக்கியுள்ளது. நீதி தேடி வந்த மனுதாரரே, கொலையாளி என்ற நிலைக்கு மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவனின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு, மனைவியின் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகளும், சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்களும், இது சாதாரண மரணமல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தின.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய கெடுபிடியான தீவிர விசாரணையில், அவரே தனது கணவரைக் கொலை செய்துவிட்டு, தப்பிப்பதற்காகப் பொய்யான நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
குடும்பத்தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரமே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் காவல் நிலையத்திற்கே வந்து புகார் அளித்த அந்தப் பெண்ணின் துணிச்சலும் திட்டமிடலும் அதிகாரிகளையே உரைய வைத்துள்ளது.
இந்நிலையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதற்கு ஏற்ப, குற்றத்தைச் மறைக்க நினைத்த மனைவியின் சதித்திட்டம் அம்பலமாகி, அவர் தற்போது கம்பிகளுக்குப் பின்னால் நிற்கிறார்.
