மகாராஷ்டிராவில் தற்போது நிலவி வரும் மராத்தி மொழி விவகாரம் மற்றும் கடுமையான அரசாங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான மற்றும் சுவாரசியமான வீடியோ இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. பிழைப்புக்காக வந்த இடத்திலிருந்து ஓட்டோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கி வைத்துக் கொண்டு ஓடும் காட்சிகளைக் கண்டு பலரும் ஆச்சரியடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் கண்டிப்பாக நடைமுறைக்குத் தேவையான மராத்தி மொழியைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகமான RTO அதிகாரிகள் தீவிர சோதனைகளில் இறங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவரால் பகிரப்பட்ட வீடியோவில், சில மனிதர்கள் தங்களின் ஆட்டோ-ரிக்ஷாவை நேராக ஒரு ரயிலின் லக்கேஜ் பெட்டிக்குள் தள்ளிக் திணிக்கும் விசித்திரக் காட்சி இடம்பெற்றுள்ளது. “RTO நடவடிக்கை பயத்தால், மராத்தி கற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் தங்கள் ஆட்டோவை ரயிலில் ஏற்றி கிராமங்களுக்குத் தப்பியோடுகிறார்கள்; அனைவரும் மராத்தி கற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களின் நிலையும் இதுதான்” என்று அந்த வீடியோவில் கிண்டலாகக் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மராத்தி மொழி சோதனைக் சம்மந்தமாகப் பரவவிட்டாலும், ரயில்வே துறை வட்டாரங்கள் இதற்கும் மொழிச் சோதனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. இது பல மாதங்களுக்கு முன்பு கோடை விடுமுறை சிறப்பு ரயில்களின் இயக்கத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போதைய கடுமையான மொழிச் சூழல் காரணமாக இந்த வீடியோ புதிய பரிமாணத்துடன் வைரலாகியுள்ளது.

மராத்தி மொழி விவகாரம் சமூக வலைதள ஜோக்குகளைத் தாண்டி நிஜத்திலும் தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் RTO பறக்கும் படையினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களிடம் மொழித் திறன் பரிசோதிக்கப்பட்டது. மேலும் மராட்டிய மண்ணில் பிழைப்பு நடத்துவோர் அந்த மண்ணின் மொழியைக் கற்க வேண்டும் என்ற வாதம் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்தப் போக்குவரத்துத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.