தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பேரவையின் நிகழ்வுகளை நேரலையில் கண்டு களித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ள விஷயம் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்படுவதால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் வாதங்களை பொதுமக்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது நிகழ்ந்த சுவாரசியமான உரையாடல் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரமுத்து தனது பதிவில் குறிப்பிடுகையில், மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியபோது இருவரும் இணைந்து சுமார் முக்கால் மணி நேரம் சட்டமன்ற நேரலை ஒளிபரப்பைக் கண்டுகளித்ததாகத் தெரிவித்தார்.
அப்பொழுது பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையை மிகவும் சிறப்பாக நடத்துகிறார்” என்று பாராட்டிப் பேசியுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய கவிஞர் வைரமுத்து, “சமூக ஊடகங்கள் சபாநாயகரைச் ‘சட்டசபையின் ஆட்ட நாயகன்’ என்று பேசிவருகின்றனவே” என்று அவரிடம் பகிர்ந்துகொண்டதாகவும், அதற்கு மு.க.ஸ்டாலின் “அப்படியா?” என்று வியப்புடன் கேட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு மற்றும் சபாநாயகரின் பாராட்டுக்குரிய அவை நடத்துமுறை குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
