மாதங்களின் அரசன் என்றும், சிங்க மாதம் என்றும் சிறப்பிக்கப்படும் ஆவணி மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதம் முடிந்து, விநாயகர், திருமால் மற்றும் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற ஆவணி மாதம் பிறந்துள்ளது. “ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடிவரும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆவணி மாதத்தின் அத்தனை நாட்களும் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற மங்கல நாட்களாகக் கருதப்படுகின்றன.
இம்மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி ஆகும். முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்நாளில் அருகம்புல் மாலை சாற்றி, கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் மோதகம் படைத்து வழிபடுவது சிறப்பாகும். அதேபோல் ஆவணி தேய்பிறையில் வரும் மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து சந்திர தரிசனம் செய்வது, வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கி நல்வாழ்வைத் தரும்.
காக்கும் கடவுளான கிருஷ்ணன் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையும் ஆவணி மாதத்திலேயே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திரம் இணையும் நாளில், வீடுகளில் கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து, வெண்ணெய், சீடை மற்றும் அவல் படைத்து வழிபடுவர். குழந்தைகளுக்குக் கிருஷ்ணர் வேடமிட்டு மகிழும் இந்த நாளில் விரதம் இருப்பது குழந்தை பாக்கியம் பெற வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
ஆவணி பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் அத்தப்பூ கோலமிட்டு, சுவையான ஓணச் சத்யாவோடு கொண்டாடும் இந்தப் பண்டிகை, கேரளாவிலும் தென்தமிழகத்திலும் அறுவடைத் திருநாளாகவும் புதுத் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
மேலும், ஆவணி அவிட்டம் மற்றும் காயத்ரி ஜெபம் ஆகிய புண்ணிய தினங்களும் இம்மாதத்தின் முக்கிய அம்சங்களாகும். உபநயனம் பெற்றவர்கள் பூணூல் மாற்றி வேத பாராயணத்தைத் தொடங்குவதற்கு ஆவணி அவிட்டம் உகந்த நாளாகும். மறுநாளில் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபித்து வழிபாடு செய்வது பாவங்களைப் போக்கி, வாழ்வை வளம் பெறச் செய்யும்.
