சமூக வலைதளங்களில் நடக்கும் தனிப்பட்ட மோதல்கள் மற்றும் ஃபேஸ்புக் சண்டைகளைக் காவல் துறை தொடர்ந்து கண்காணிக்க முடியாது என்றும், அதற்கு அவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியச் சமூகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவு வெளியிட்டதாகப் பாஜக நிர்வாகி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பாஜக நிர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, “சமூக வலைதளங்களில் நடக்கும் தனிப்பட்ட மோதல்களைக் காவல் துறை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. ஃபேஸ்புக்கில் நடக்கும் சண்டைகளைப் பின்தொடர்வது காவல் துறையின் வேலையே அல்ல. ஒரு தவறான பதிவுக்குப் பதிலாக மற்றொரு தவறான பதிவை வெளியிடுவது முறையான செயல் அல்ல” என இரு தரப்பிற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “அவதூறு பரப்பப்பட்டால் அது குறித்து உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்வதே சரியான மற்றும் முறையான நடவடிக்கையாகும். அதை விடுத்துச் சமூக வலைதளத்திலேயே தொடர்ந்து மோதலில் ஈடுபடுவது தவறான செயல். இரு தரப்பினருக்கும் வேறு வேலையே இல்லையா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்தார்.
