கர்நாடகாவைச் சேர்ந்த ஆருஹி ரெட்டி என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு திருமண வரன் வந்துள்ளது. அந்த மாப்பிள்ளை பார்க்க அழகாகவும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், ஆண்டுக்கு ₹40 லட்சம் சம்பளம் வாங்கும் உயர் பதவியிலும் இருந்துள்ளார். ஆனால், அவரின் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலை பார்த்த அந்த பெண், உடனடியாக அந்த திருமண வரனை நிராகரித்துள்ளார்.

​அதற்கான காரணத்தை தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஆருஹி ரெட்டி, “அந்த நபர் ராகுல் காந்தியை தனது ரோல் மாடலாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு தோற்றுப்போனவரை (Loser) தன் ரோல் மாடலாக நினைப்பவருக்கு எவ்வளவு குறைந்த ஐக்யூ (IQ) இருக்கும் என்பதை புரிந்து கொள்வது பெரிய விஷயமல்ல” என்று காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும் தொடர்ந்த அவர், “இப்படிப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிமைத்தனம், தேசவிரோதம் மற்றும் இந்து எதிர்ப்பைத் தவிர வேறு எதைக் கற்றுக்கொடுப்பார்கள்? எனக்கு பணம், அழகு, சிறந்த வாழ்க்கையை விட என் தேசமும் என் மதமும்தான் மிகவும் முக்கியம். ஒரு பெருமைமிகு தேசியவாத இந்துவாக, தோற்றவரை ரோல் மாடலாகக் கொண்ட ஒருவரை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

​இந்த விசித்திரமான நிராகரிப்புச் சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள், திருமணம் போன்ற வாழ்க்கை முடிவுகளை இந்த அளவுக்கு தீர்மானிக்கலாமா என்பது குறித்து நெட்டிசன்கள் இடையே காரசாரமான விவாதம் வெடித்துவருகிறது.