ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் 2026-க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதுடன், அந்தச் சட்டத்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

​இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய சட்டத்திருத்தமானது மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், நாட்டின் இயற்கை வளங்களைப் பெருநிறுவனங்கள் (கார்ப்ரேட்டுகள்) எளிதாகக் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த விதிகளை ஒன்றிய அரசு திருத்தியுள்ளதாகவும் சாடியுள்ளது.

​மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் கனிம உரிமைகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முயல்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், எனவே 2026-ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிபிஐ வலியுறுத்தியுள்ளது.