மாதம் ₹35,000 சம்பளம், வாரத்தில் 6 நாட்கள் வேலை, ஆனால் தினமும் பயணம் செய்யவே 6 மணி நேரம் செலவாகிறது என்று மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பெருநகரங்களில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க இளைஞர்களின் நிஜ வாழ்க்கைக் கண்ணாடியாக இந்த பதிவு மாறியுள்ளது. “தினமும் வேலைக்கும் வீட்டிற்கும் அலைவதிலேயே என் வாழ்நாளின் பெரும் பகுதி வீணாகிறது, வீட்டிற்கு நான் தூங்குவதற்காக மட்டுமே வருகிறேன்” என்று அவர் வெளிப்படுத்திய வேதனை பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் துரத்திக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். ஆனால், அங்குள்ள அதிகப்படியான வீட்டு வாடகை காரணமாக பெரும்பாலானோரால் அலுவலகத்திற்கு அருகில் தங்க முடிவதில்லை. இதனால், தொலைதூரப் புறநகர்ப் பகுதிகளில் தங்கி, தினமும் நெரிசல் மிகுந்த ரயில்களிலும் பஸ்களிலும் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

காலை நேரத்தில் கூட்ட நெரிசலில் அடித்துப்பிடித்து அலுவலகம் சென்று, நாள் முழுவதும் உழைத்துவிட்டு, மீண்டும் இரவில் வீடு திரும்பும்போது உடலும் மனமும் முற்றிலும் சோர்வடைந்து விடுகிறது. இந்த இளைஞரின் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த அனுபவங்களைச் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெருநகரங்களில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைப்பதும், பயணத்திலேயே பாதி வாழ்க்கையைத் தொலைப்பதும் மன அழுத்தத்தையும் உடல்நலக் கேடுகளையுமே தருகிறது என்று பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.

வெறும் பணத்திற்காக வாழ்க்கையின் நிம்மதியையும் குடும்பத்தோடு செலவிடும் நேரத்தையும் அடகு வைக்கும் இந்தக் கார்ப்பரேட் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் ஒருமுறை தீவிரமாக யோசிக்க வேண்டிய கட்டாயத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.