தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ஆதார் எண்களுக்குச் சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 2.28 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். புதிய கார்டு, முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் போன்ற அனைத்து சேவைகளும் தற்போது இணையவழியில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஆதார் எண்கள், செல்போன் எண்கள் மற்றும் முகவரிகள் போன்ற முக்கியமான தகவல்களைச் சைபர் குற்றவாளிகள் திருடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘கணினி அவசர கால பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
இந்தத் தரவுகள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால் அது பெரிய அளவிலான நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை உடனடியாகப் பலப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உடனடியாகப் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இணையதளத்தில் நவீன ஃபயர்வால் பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் தடுப்புத் தொழில்நுட்பங்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தரவுகள் எக்காரணம் கொண்டும் கசியாமல் இருக்க உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
