தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவன், தனது பள்ளியின் இயக்குநரும் ஆசிரியையுமானவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நாகார்ஜுனா பள்ளியின் இயக்குநராகப் பணியாற்றி வந்த கல்லு ரூபா ரெட்டி என அடையாம் காணப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் ரூபா ரெட்டி தனியாக இருந்தபோது, இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், மனைவியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அண்டை வீட்டாரிடம் கூறியதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், ரூபா ரெட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்தனர். அவரது வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அவர் 27 முறை குத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அது உறுதி செய்யப்படும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் பத்தாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். அந்த மாணவன் எதற்காக இந்த கொடூரமான கொலையைச் செய்தான் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ரூபா ரெட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில், காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவனே ஆசிரியையைக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.