உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், ராட்டினத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிறுமிகள் உள்பட பல பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற ‘சவன் மகோத்சவ்’ திருவிழாவின்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தின் கூண்டு திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் திடீர் விபத்தில் மூன்று சகோதரர்கள் உள்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதில் அங்கிதா சிங் (14) மற்றும் நிஷா குமாரி (16) ஆகிய இரண்டு சிறுமிகள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ராட்டினத்தின் பாகம் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ராட்டினத்தை நிறுத்தக் கோரியும், ஆபரேட்டர் உடனடியாக அதனை நிறுத்தத் தவறியதால் மேலும் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் குடும்பத்தினரும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே இருந்த மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். முதலுதவிக்குப் பின் மூவர் வீடு திரும்பிய நிலையில், படுகாயமடைந்த இருவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“>

 

தற்காலிக திருவிழாக்களில் அமைக்கப்படும் ராட்டினங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முறையான அனுமதிகள் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.