சமூக வலைதளங்களில் சில நொடிகள் பெறப்படும் மலிவான லைக்குகளுக்காகவும், ரீல்ஸ் மோகத்திற்காகவும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அடகு வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில், வேகமாக வந்துகொண்டிருந்த உள்ளூர் மின்சார ரயில் மீது இளைஞர் ஒருவர் கல் வீசி எறிந்த திடுக்கிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணிக்கும் அப்பாவைப் போன்ற பயணிகள் மீதோ அல்லது ரயில் ஓட்டுநர் மீதோ பட்டுப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தக் கொடூரச் செயலை, வெறும் ரீல்ஸ் வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே அந்த இளைஞர் செய்துள்ளார் என்பதுதான் இதிலுள்ள உச்சக்கட்ட கொடுமையாகும்.

ரயில் தண்டவாளத்திற்கு அருகே நின்றுகொண்டு, சற்றும் பயமோ பொறுப்போ இன்றி வேகமாக வந்த ரயிலை நோக்கி அந்த வாலிபர் கல்லை எறியும் காட்சிகள் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த ஆபத்தான ஸ்டண்ட் வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளப் பயனாளர்களும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்படைந்தனர்.

மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டம் கடுமையாகப் பாய வேண்டும் என்றும், அவர்களைக் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் இணையவாசிகளும் ரயில் பயணிகளும் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் இந்த அதிரடி எதிர்ப்பையும் சட்ட நடவடிக்கையின் தீவிரத்தையும் உணர்ந்த அந்த வாலிபர், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக மற்றொரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புதிய வீடியோவில், தான் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து, கை கூப்பி மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெறும் சில லைக்குகளுக்காகச் செய்த இந்த முட்டாள்தனமான செயலால் தனக்கு ஏற்படப் போகும் சட்டப் சிக்கல்களையும் தண்டனையையும் எண்ணிப் பயந்துபோன அந்த இளைஞர், பொதுமக்கள் மற்றும் காவல்துறையிடம் கதறி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இருப்பினும், வெறும் மன்னிப்போடு இந்த விவகாரத்தை விட்டுவிடக் கூடாது என்றும், ரீல்ஸ் மோகத்தில் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் மற்ற இளைஞர்களுக்கும் இது ஒரு பாடம் புகட்டும் வகையில் அமைய வேண்டும் என்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>