மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள செக்டார் 15 பகுதியில், பொதுமக்களின் சுகாதார பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை ஒன்று, ஒரு குடும்பத்தின் வீடாகவே மாற்றப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரசு நிதியில் கட்டப்பட்டுப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டிய இந்தக் கழிப்பறையை, சிலர் தங்களது சொந்த வீட்டைப் போலப் பயன்படுத்தி சமையல் செய்வது, தூங்குவது என அனைத்து அன்றாட நடவடிக்கைகளையும் அங்கேயே மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களை ஆக்கிரமித்து இப்படிச் சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காமோத்தே பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் அவசரத் தேவைகளுக்காக இந்தச் சுகாதார வளாகத்தைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். பொது பயன்பாட்டிற்காகப் லட்சக்கணக்கில் செலவழித்து உருவாக்கப்பட்ட கட்டமைப்பு, இப்படித் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கிச் சீரழிவதைப் பார்த்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கழிப்பறையின் முகப்பிலேயே சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடுக்கப்பட்டுக் கிடப்பது, நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே தோலுரித்துக் காட்டுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்துப் பலமுறை அதிகாரிகளுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டும், மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக அப்பகுதி வாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் கட்டப்பட்ட இடமே, தற்போது பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருப்பது நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

உடனடியாக பன்வெல் மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, கழிப்பறையைத் தூய்மைப்படுத்திப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும் என்பதே அனைவரின் ஒரே கோரிக்கையாக உள்ளது.