தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். சரத்குமார் ஆற்றிய உரையும், அவர் முன்வைத்த கலகலப்பான யோசனையும் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் 2026-27 நிதியாண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027-ஆம் ஆண்டில் ரூ. 214 லட்சம் கோடியாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2026 வரையில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 197 லட்சம் கோடியாக உள்ள நிலையில், ஓராண்டில் சுமார் ரூ. 17.6 லட்சம் கோடி கடன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், தமிழக அரசின் கடன் விவகாரமும் மாநில அரசியலில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறி வருகிறது.
இந்தச் சூழலில், சட்டப்பேரவையில் உரையாற்றிய மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். சரத்குமார், தமிழக முதலமைச்சர் விஜயின் மக்கள் சேவையைப் புகழ்ந்து பேசுகையில் ஒரு சுவாரசியமான கருத்தைத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும், அவர் ஆற்றிவரும் சேவைகளையும் வெகுவாகப் பாராட்டிய அமைச்சர் சரத்குமார், முதலமைச்சரின் சேவையைப் பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால், அந்தத் தொகையைக் வைத்தே இந்தியாவின் மொத்தக் கடனை இன்றே அடைத்துவிடலாம் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தக் கலகலப்பான பேச்சைக் கேட்டு அவையில் இருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மேசையைத் தட்டி தங்களது மகிழ்ச்சியையும் சிரிப்பையும் வெளிப்படுத்தினர். இந்தச் சுவாரசியமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
